×

உடல்நலக் குறைவு காரணமாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உயிரிழந்தார்

சென்னை: அதிமுக அவைத்தலைவராக இருந்தவர் மதுசூதனன் (81). சென்னை, வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் வசித்து வந்தார். இவரது மனைவி ஜீவா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு குழந்தை இல்லை.வளர்ப்பு மகள் உள்ளார். மதுசூதனனுக்கு2 கிட்னி பழுதடைந்ததால், 2 மாதமாக வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமானதால்,   கடந்த மாதம் 19ம் தேதி சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள  அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை 4.32 மணிக்கு சிகிச்சை பலனின்றி மதுசூதனன் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து அவரது உடல் இன்று காலை வீட்டுக்கு எடுத்து செல்லப்படுகிறது. பிற்பகல் 2 மணிக்கு மூலக்கொத்தளத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. மறைந்த மதுசூதனன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறி துறை அமைச்சராக பணியாற்றினார். அவரது திருமணத்தை மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நடத்தி வைத்தனர். ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக பணிபுரிந்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு முறை வெற்றி பெற்றார். 2017ம் ஆண்டு ஜெயலலிதா மறைவையொட்டி ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரனிடம் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஓபிஎஸ் தனியாக பிரிந்தபோது அவருக்கு ஆதரவளித்தவர்களில் முக்கியமானவர் மதுசூதனன். அதிமுகவில் உட்கட்சி பிரச்னை ஏற்பட்டு, நீதிமன்றத்துக்கு சென்றபோது அவைத்தலைவர் மதுசூதனன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் அணி தான் உண்மையான அதிமுக என கூறியதால், சின்னம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.அரைக்கம்பத்தில் அதிமுக கொடி: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘அஞ்சா  நெஞ்சன் என்று அழைக்கப்பட்ட மதுசூதனன் கட்சிக்காக 48 முறை சிறை  சென்றுள்ளார்.  அவரது மறைவையொட்டி 7ம் தேதி (நாளை) வரை 3  நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அதிமுக கொடி அரைக் கம்பத்தில்  பறக்கவிடப்படும். நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ரத்து  செய்யப்படுகிறது’’ என கூறியுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: மதுசூதனனின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளானேன் என தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.ேக.வாசன், எஸ்.டி.பி.ஐ.கட்சி தலைவர்  நெல்லை முபாரக்,  புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம், சசிகலா  உள்ளிட்ட பலர் மதுசூதனன் மறைவுக்கு இரங்கல்  தெரிவித்துள்ளனர்….

The post உடல்நலக் குறைவு காரணமாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உயிரிழந்தார் appeared first on Dinakaran.

Tags : Madusuthanan ,Chennai ,Vanarapet ,Gothandaraman Street ,Zeeva ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...